Archive for the ‘கவிதை’ Category

நிழல் தந்த மரம் | திண்ணையில் வெளியான கவிதை

வணக்கம். நான் இங்கு பதிவு செய்து பல நாட்கள் ஆகிவிட்டன. எனது படிப்பு முதலிய கடமைகளை செய்வதற்குள் என்னால் இங்கு என் படைப்புகளை வெளியிட இயலவில்லை. மெதுவாக இந்த வலைப்பூவில் எனது இலக்கிய முயற்சிகளை பதிவு செய்ய முயற்சி செய்வேன். இங்கு இந்த கவிதையோட தொடங்குகிறேன்…

நிழல் தந்த மரம் | திண்ணையில் வெளியான கவிதை

நிழல் தந்த மரம்

நிழல் தந்த மரம்

ஆல மரம் எப்படி இருக்கும்
என்று சிறுவன் தன்
தந்தையிடம் கேட்டான்.

வீட்டிற்கருகில் மரமொன்றும்
இல்லாததால் கூகுளிலிருந்த
மரமொன்றை கொண்டு வந்து
கணினித் திரையில் நட்டார்
சிறுவனின் தந்தை.

கணினி திரையினுள் அந்த
மரத்தின் நிழலும் பரந்து
இருந்தது..

களைப்பாகும் நேரமெல்லாம்
அந்த விழுதுகளில்
தொங்கிக் கொண்டே
இளைப்பாறுகிறான்
அந்த சிறுவன்…

Advertisements

அழுகைக்கு காரணம் – வல்லமையில் வெளியான கவிதை

அழுகைக்கு காரணம்

அழுகைக்கு காரணம்

கம்பி நுனியில் நின்றுக்கொண்டு
எல்லோருடைய வாழ்த்துக்களையும்
ஊக்கங்களையும் புகழ்களையும்
இகழ்களையும் ஏளனங்களையும்
காணிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு
தெருமுனையில் தன் சாகசங்களை
செய்துக்கொண்டிருந்தாள் அச்சிறுமி.

சாகசங்களைப் பார்த்து மகிழ்ந்த
மக்களில் சிலர் குறைவாகவும்
நிறைவாகவும் அவர்களுடைய
பணப்பையிலிருந்து சிறுமியுடைய
பணவலையில் வீசினர்.

அவளுக்குப் போட்டியாக
அவளது இளைய சகோதரன்
சாகசம் செய்வது போல்
அக்கம்பின் நிழலில்
நடந்து கொண்டிருந்தான்.

நிழல் சுடுகிறது.
அவனுக்கு அதில்
நடப்பது
மிகவும் கடினமாகவே
இருந்தது. ஆனாலும்
யாரும் அவனுக்கு
காசு போடவில்லை.

யானையை சுமந்த எறும்புகள் – திண்ணையில் வெளியான கவிதை

யானையைச் சுமந்த எறும்புகள்

நொண்டி வந்த
யானையை நோக்கி
அது விழுந்து விடும்
என்று இரங்கி
இரு பக்கமும்
பக்கபலமாக
ஓடின ஈரெறும்புகள்.

நொண்டி நடந்த
யானையின் வேகத்திற்கு
கூட ஓடமுடியாமல்
யானையைச் சுமந்தன
அந்த சிறு எறும்புகள்
அதன் சிறு மூளைக்குள்

கொசுவிற்கு பாராட்டு – சூர்யா நீலகண்டன்

கொசுவிற்கு பாராட்டு

ஒரு அரசியல் கூட்டத்தில்
எல்லோரும் கைதட்டுவதைப்
பார்த்து எதற்கு
கைதட்டுகிறார்களென
தாய் கொசுவிடம் கேட்டது
குட்டிக் கொசு.
கை தட்டுவதே
பாராட்டுவதற்குத்தான்
என்றது தாய்கொசு.

பசியுடன் உணவு தேடி
அலைந்த அந்த
குட்டிக் கொசு
நடனமாடி நடனமாடி
ஒருவரின் முன்பு
ஆடியது..

அவர் கவனிக்கவில்லையென்று
முகத்தின் முன்பாக
ஆடி கன்னத்தில்
துளை போட்டு
மது மயக்கத்தில்
மயங்கி நின்றது.

அவர் இரு கைகளையும்
அடிப்பதற்காக
எத்தனித்தபோது
பாராட்டின் பெருமிதத்தில்
கொசு இன்னும்
முகத்திற்கருகில்
ஆடிப்பறக்க
அவரின் கைகளுக்குள்
கொசுவின் எல்லாப்பிரிவு
ரத்தங்களும்
சித்திரமாய் ஜொலித்தன.

மானும் கொம்பும் – திண்ணையில் வெளியான கவிதை

மானும் கொம்பும்

மண்ணுக்கு மேலே
ஒரு மான் கொம்பு தெரிய
மண்ணை தன்
கூரியக் கொம்பால்
தோண்டித் தோண்டி
எறிந்தது இளமான்.

தோண்டித் தோண்டி
மண்ணுள் புதைந்த
மானைக் காப்பாற்றும்
முயற்சியில்
மானின் கொம்புகளே
ஒடிந்து போக
உள்ளே வாடி
இலை உதிர்ந்த
ஒரு சிறு மரத்தின்
வேர்களேத் தெரிந்தன.

தன் இழந்த
கொம்புகளுக்காய்
வருந்தாத மான்
புதைந்த மானுக்காய்
வருந்திச் சென்றது.

பூனையின் தோரணை – திண்ணையில் வெளியான கவிதை

ஓவியம் - சூர்யா நீலகண்டன்

அந்த குழந்தை
அப்பாவிடம் கூறியது
அதற்கு ஏன்
மீசை வளரவில்லை
என்று.

அப்பா அதனிடம்
கேலியாக
மூன்றில்
எங்கு மீசை
என்று.

அப்பாவை கேட்ட
அப்பாவிக் குழந்தை
தன் செல்லப் பூனையிடம்
கேள்வியாக இரண்டில்
உனக்கு மட்டும்
எப்படி மீசை
என்றது.

திடீரென பூனையின்
மீசையிலேறிய
கௌரவத்தில்
அப்பாவின் தோரணை
அதன் உறுமலில்
உருவம் கொண்டது.

நாய்க்கு நன்றி – வல்லமையில் வெளியான கவிதை

சாலையில் இருமருங்கும்
காட்டு சிங்கங்களும்
வேட்டை நரிகளும்
சீறி பாய்ந்ததை
பார்த்து பயந்து போன
மக்களைப் பார்த்து
பயந்து போனேன்
நானும்.

அவைகளிலிருந்து
தப்பிக்க நினைக்கும்
தருணங்களில்
தந்திரமாய் தப்பித்து
கடக்கும் தருணத்தை
தயவுடன் காட்டிய
என் நாய்க்கு
நன்றியுள்ளவனாய்
நானும்

%d bloggers like this: